உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

காளத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா யாக பூஜை

Published On 2022-02-03 14:09 IST   |   Update On 2022-02-03 14:09:00 IST
காளத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா (பிப்ரவரி-3) மாலை முதல் கால யாக பூஜை நடைபெறுகிறது
புதுச்சேரி:

புதுவை  காளத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி  (பிப்ரவரி-3) மாலை முதல் கால யாக பூஜை நடைபெறுகிறது.

புதுவை மிஷன் வீதியில் பிரசித்தி பெற்ற காளத்தீஸ்வரர்  கோவில் (செட்டிக்கோவில்) உள்ளது. இக்கோவிலுக்கு கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது.

இந்த நிலையில் மீண்டும் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் வருகிற 6&ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. 

இதனையொட்டி கும்பாபிஷேக விழா கடந்த 30-ந் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் மகா கணபதி பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை  9 மணிக்கு மூர்த்தி ஹோமம், சாந்தி ஹோமம் நடந்தது. மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, தீபாரதணை நடைபெற்றது. இன்று மாலை 4.30 மணிக்கு மேல் முதல் காலை யாக பூஜை நடைபெறுகிறது. 6 மணி முதல் 7 மணி வரை ஆன்மீக சொற்பொழிவும்,  7 மணி முதல் 9.30 மணி வரை புதுவை சம்பந்தம் குருக்கள் குழுவினரின் திருமுறை திருப்புகழ் இன்னிசை நடக்கிறது.

நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7மணிக்கு 2&ம் கால யாகபூஜையும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும், நாளை மறுநாள்(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு 4&ம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு 5&ம் கால யாக பூஜையும் நடைபெறுகிறது.

6&ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அதிகாலை 5 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், காலை 8 மணிக்கு கடம்புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 9.05 மணிக்கு விமானங்கள், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் 9.20 மணிக்கு கற்பகவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சிவகாமி அம்பிகா சமேத நடராஜர், ஞானாம்பிகா சமேத நடராஜர், ஞானாம்பிகா சமேத காளத்தீஸ்வரர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடை பெறுகிறது.

கும்பாபிஷேக விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், இந்து சமயஅறநிலையத்துறை செயலர் மகேஷ், ஆணையர் சிவசங்கரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவலர் குழுவினர், திருப்பணி ஆலோசனைக்குழுவினர் மற்றும் புதுவை ஆயிர வைசிய மரபினர்கள் செய்து வருகிறார்கள்.

Similar News