காதலியுடன் தனியார் விடுதியில் தங்கிய காதலன் மயங்கி விழுந்து மரணம்
புதுச்சேரி:
வேலூர் திருநகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் பொழில் இளவேனில் (வயது24). இவரும் அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரமேஷ் (26) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி இருவரும் புதுவைக்கு சுற்றுலா வந்தனர். நோணாங்குப்பம் படகு குழாம் அருகே ஒரு தனியார் விடுதியில் தங்கி புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து வந்தனர்.
நேற்று முன்தினம் ஆரோவில் கடற்கரைக்கு சென்று விட்டு இரவு விடுதியில் தங்கினர். அப்போது நள்ளிரவு 1.30 மணியளவில் ரமேசுக்கு திடீர் நெஞ்சுவலி வந்தது. உடனே பொழில்இளவேனில் காதலனை சிகிச்சைக்காக புதுவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். அங்கு சிகிச்சை அளித்த பின்னர் மீண்டும் விடுதிக்கு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை ரமேசுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி சரிந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பொழில்இளவேனில் விடுதி ஊழியர்கள் உதவியோடு ரமேசை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது வரும் வழியிலேயே ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பொழில் இளவேனில் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.