உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

அழகு நிலையத்தில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது

Published On 2022-02-02 11:18 IST   |   Update On 2022-02-02 11:18:00 IST
புதுவை பாரதி வீதியில் அழகு நிலையத்தில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் குமார் (வயது61). இவர் புதுவை பாரதி வீதியில் பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வருகிறார். வாடிக்கையாளர்கள் சென்ற பின்னர் குமார் அழகு நிலையத்தை பூட்டி சென்றார். 

இந்த நிலையில் ஒதியஞ்சாலை போலீசார் நள்ளிரவு பாரதி வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குமாருக்கு சொந்தமான அழகு நிலையத்தின் கதவை ஒரு வாலிபர் உடைத்துக் கொண்டிருப்பதை போலீசார் கண்டனர்.

இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ மாணிக்கம் (26) என்பதும், அழகு நிலைய கதவை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. 

மேலும் இவர் மீது காரைக்கால் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜமாணிக்கத்தை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

Similar News