உள்ளூர் செய்திகள்
பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி ரூ.24 லட்சத்துக்கு ஏலம்- போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
செங்கல்பட்டு:
தமிழ்நாட்டில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.02.2022 அன்று நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 6 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மதுராந்தகத்தை அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சியில் உள்ள 14-வது வார்டு உறுப்பினர் பதவியை அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பு ரூ.24 லட்சத்துக்கு ஏலம் விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊத்துக்காடு அம்மன் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தனர். ஆனால் இந்த சம்பவம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த 500-க்கும் மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிறகு அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில், இடைக்கழிநாடு பேரூராட்சியில் நடைபெறவுள்ள தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றும், வார்டு மறுவரையறை செய்த பின்னரே தேர்தல் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதை மீறி தேர்தல் நடைபெற்றால் தேர்தல் புறக்கணிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்...
தி.மு.க. வட்ட செயலாளர் வெட்டிக் கொலை - மடிப்பாக்கத்தில் பதற்றம்