உள்ளூர் செய்திகள்
தாம்பரம் கமி‌ஷனர் ரவி

போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களை அலைக்கழித்தால் கூண்டோடு மாற்றி விடுவேன்- தாம்பரம் கமி‌ஷனர் எச்சரிக்கை

Published On 2022-02-01 16:07 IST   |   Update On 2022-02-01 16:07:00 IST
தலைமையகத்துக்கு செல்லுங்கள் என்று அனுப்பி வைத்து பொது மக்களை அலைக்கழிக்கக் கூடாது. ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு கமி‌ஷனர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை:

தாம்பரம் போலீஸ் கமி‌ஷனராக இருக்கும் ரவி, சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதிலும், பொது மக்களின் குறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்தநிலையில் தனது எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் புகார் அளிக்க வந்தால் உடனடியாக புகார்களை பெற்று உரிய ரசீது வழங்க வேண்டும். அதுபோன்று செயல்படாமல் பொது மக்களை அலைக்கழித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காவல் நிலையத்தில் உள்ள அனைவரையும் கூண்டோடு மாற்றிவிடுவேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியுள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கமி‌ஷனர் ரவி அதில் கூறி இருப்பதாவது:-

பள்ளிக்கரணையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறீர்கள். இதுபோன்று செயல்பட்டால் அனைவரையும் கூண்டோடு மாற்றிவிடுவேன். பொது மக்களின் நண்பர்களாகவே காவலர்கள் இருக்க வேண்டும். ஏன் அது போன்று செயல்படாமல் இருக்கிறீர்கள்? சைபர் கிரைம் தொடர்பாக புகார் வந்தாலும் அதற்கும் சி.எஸ்.ஆர். ரசீது வழங்க வேண்டும். தலைமையகத்துக்கு செல்லுங்கள் என்று அனுப்பி வைத்து பொது மக்களை அலைக்கழிக்கக் கூடாது. ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு கமி‌ஷனர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News