உள்ளூர் செய்திகள்
24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை துறை தலைவர் தகவல்
பொதுமக்கள் பாதிக்காத வகையில் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என துறை தலைவர் சண்முகம் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை மின்துறை தலைவர் சண்முகம் நிருபர் களிடம் கூறியதாவது:-
மின்துறை அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாக திகழ்கிறது. மின் விநியோகம் இல்லாவிட்டால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதை கருத்தில் கொண்டு போராட்டம் நடத்த தடை விதித்தோம். இது மின்துறை சட்ட விதிகளில் கூட இடம் பெற்றுள்ளது.
புதுவை மின்துறையை தனியார்மயமாக்கு வதற்கான பணிகள் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. அரசின் ஒப்புதல், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் என பல பணிகள் உள்ளது. அது மட்டுமின்றி தற்போது மின்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தங்களின் அரசு ஊழியர் அந்தஸ்து பாதிக்கப்படுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கு எந்தவிதமான குறைபாடும் ஏற்படாது. சம்பளம், பதவி உயர்வு, பென்ஷன் ஆகிய அனைத்தும் தொடரும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. புதுவை மின்துறையில் உள்ள கட்டமைப்புகள் 30 ஆண்டு பழமையானது. இதை மாற்ற வேண்டிய கட்டாயமும், அவசியமும் ஏற்பட்டுள்ளது.
இதற்கான நிதி ஆதாரம் இல்லை. இதனால் தொழிற் சாலைகள், வீடுகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க முடியாத சூழல் உள்ளது. தனியார் மயமாகும் போது ஒரு சில ஆண்டுகளில் கட்டமைப்பை புதிதாக மாற்றி விடுவர்.
மின்துறையின் சொத்துக்கள் தனியாருக்கு வழங்கப் போவதில்லை. துறையின் வசம் உள்ள நிலம் அரசிடம் தான் இருக்கும். மின் கட்டமைப்புகளை மட்டுமே தனியாரிடம் வழங்க உள்ளோம்.
இந்த நிலையில் ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தும். இருப்பினும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் மின்விநியோகத்தை தொடர நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக ஒப்பந்த அடிப்படையிலும், மின்துறையில் பயிற்று நர்களாக இருந்தவர்களை, ஐ.டி.ஐ. படித்தவர்களை தொடர்பில் வைத்துள்ளோம்.
அவர்கள் தடை ஏற்படும் இடங்களில் மின் விநியோகத்தை சீரமைப்பர். போராட்டத்தில் சமூக விரோதிகள் இடையில் புகும் அபாயம் உள்ளது. இதனால் மின்துறை ஊழியர்களே பாதிக்கப்படுவர். எனவே போராட்டத்தை கைவிடக்கோரி நோட்டீஸ் அளித்துள்ளோம்.
இன்று (பிப்ரவரி1) குறைவான ஊழியர்களே பணிக்கு வந்துள்ளனர். மக்கள் வழக்கம் போல மின் குறைபாடுகளை 1912 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகாரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.