உள்ளூர் செய்திகள்
காரைக்காலில் கொரோனா தடுப்பூசியை துரிதப்படுத்த ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்
காரைக்கால் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசியை துரிதப்படுத்த, ஆட்டோக்கள் மூலம் செய்யப்படும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை, மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் துவங்கி வைத்தார்.
காரைக்கால்:
கரைக்கால் மாவட்டத்தில், கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த, மாவட்ட நலவழித்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மாவட்ட கலெக்டர் அர்ஜுன் சர்மா, புதுச்சேரி நலவழித்துறையின் இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு ஆகியோரின் உத்தரவின் பேரில், காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்தும் நோக்கத்துடன், ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கியது.
இந்த பிரச்சார ஆட்டோக்களை காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நலவழித்துறை நோய்த்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சீ.சேகர், சுகாதார ஆய்வாளர்கள் ஆண்ட்ரூஸ், சிவவடிவேல் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த விழிப்புணர்வு பிரச்சாரம், 3 ஆட்டோக்கள் மூலம் காரைக்கால் மாவட்டம் முழுவதும் சுமார் 20 நாட்கள் பிரச்சாரம் செய்யப்பட உள்ளது.
மேலும் இது சம்பந்தமாக துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் கூறியதாவது:-காரைக்கால் மக்கள் நலன் கருதி கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நலவழித்துறை இடைவிடாமல் செய்து வருகின்றது. மக்கள் சற்று அலட்சியம் காட்டும்போது கொரோனா தாக்கத்தின் எண்ணிக்கையும் கூடிவிடுகிறது. ஆகையால் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் முககவசம் அணிவதையும், தனிமனித இடைவெளியையும் அடிக்கடி கைகளை கழவுவதையும், அன்றாட கடமையாக கடைபிடிக்க வேண்டும். பெரும்பாலும் அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே செல்லவேண்டும்.
மேலும், காரைக்கால் மாவட்டத்தில் இன்னும் சில பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது தெரியவருகிறது. கொரொனாவிலிருந்து நாம் காத்துக்கொள்ள வேண்டுமானால் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். ஆகவே பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை கேட்டு கொரோனாவை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் முன்வரவேண்டும் என்றார்.