உள்ளூர் செய்திகள்
வதந்திகளை நம்ப வேண்டாம்-மின்துறை தலைவர் வேண்டுகோள்
கட்டணம் குறையும், மானியம் தொடரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மின்துறை தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மின்துறை தலைவரும், கண்காணிப்பு பொறியாளருமான சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் உள்ள மின்துறைகளின் செயல் திறன் மற்றும் நுகர்வோர் சேவையை மேம்படுத்த, மத்திய அரசு மின்துறைகளை தனியார் மயமாக்கும் கொள்கை முடிவை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக தயாரிக்கப்பட்ட வரைவு பரிமாற்ற திட்டத்தின்படி தற்போது புதுவை அரசு மின்துறை ஊழியர்களால் பெறப்படுகின்ற ஊதியம், ஓய்வூதியம், வருடாந்திர ஊதிய உயர்வு, பதவி உயர்வு மற்றும் இதர அனைத்தும் ஓய்வுக்கால பலன்கள் பாதுகாக்கப்படுகிறது.
இதேபோல், மின் கட்டண நிர்ணய செயல்முறை தற்போது உள்ளது போல் கூட்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் தொடரும். புதிதாக வரக்கூடிய தனியார் நிறுவனமும் கூட தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளுடன் வருடாந்திர மின் கட்டண நிர்ணய விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
எனவே, நுகர்வோருக்கான மின் கட்டணத்தை தனியார் நிறுவனத்தால் தன்னிச்சையாக அதிகரித்து கொள்ள முடியாது. எனவே, ஒரு சிலர் கூறுவதுபோல் மின் கட்டணமானது எப்போதும் அதிகமாக இருக்கும் என்றும், தனியார் நிறுவனத்தால் தன்னிச்சையாக நிர்ணயிக்கப்படும் என்ற கருத்தும் முற்றிலும் தவறானது.
உண்மையில், தனியார் மயமாக்கலால் விநியோக செயல்பாட்டு திறன் அதிகரிக்கும். அதன் பலனாக பொதுமக்களுக்கு மின் கட்டண உயர்வு விகிதம் குறைவதற்கு ஏதுவாகும். மேலும், தனியார் மயமாக்கப்படும் பட்சத்தில் அனைத்து பொது
மக்களுக்கும் உடனடி சேவையும் சிறந்த பரா மரிப்பும் உறுதி செய்யப்படும்.
எனவே, புதுவை மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிராக பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. வரைவு பரிமாற்ற திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள ஊழியர்களின் பணி பாதுகாப்புகளை பற்றி விளக்குவதற்காக மின்துறை, ஊழியர் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தும், ஊழியர் சங்கங்கள் பரிமாற்ற திட்ட விதிகளை அறிய ஆர்வம் காட்டவில்லை.
இதனிடையில், ஒரு சில இயக்கங்கள், பொதுமக்கள் மத்தியில் விவசாய மானியம் திரும்ப பெறப்படும் என்றும், மின் கட்டணம் பல மடங்கு உயரும் என்றும் வதந்திகள் பரப்புகின்றன. ஆனால் உண்மையில் தனியார் மயமாக்குதலுக்கு பின்பும் விவசாயம் மற்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் மானியங்களை புதுவை அரசு வழங்க இயலும்.
எனவே, மானியம் பறிபோகும் என்று பொதுமக்கள் மத்தியில் பரப்பப்படும் வதந்தி ஆதாரமற்றது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.