உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று இந்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல்

Published On 2022-01-30 17:18 IST   |   Update On 2022-01-30 17:18:00 IST
புதுவை அரசின் வேண்டுகோளின் அடிப்படையில், காரைக்கால் மாவட்டத்தில் இந்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.

காரைக்கால்:

காரைக்கால் மாவட்டத்தில் நெல் அறுவடை தொடங்கிய நிலையில், நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்கவேண்டும் என, பல்வேறு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் புதுவை அரசை வலியுறுத்தி வந்தனர்.

தொடர்ந்து நெல் கொள்முதல் செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்காத புதுவை அரசை கண்டித்து, காரைக்காலில் பிப்.1-ந் தேதி பேரணி நடத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக விவசாயிகள் சிலர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் புதுவை அரசின் வேண்டுகோளின் அடிப்படையில், காரைக்கால் மாவட்டத்தில் இந்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.

காரைக்கால் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், தென்னங்குடி நவீன அரிசி ஆலை ஆகிய 2 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தென்னங்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு நெல் கொள்முதல் செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவா, மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, துணை கலெக்டர் ஆதர்ஷ், மாவட்ட கூடுதல் வேளாண் இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள், விவ சாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் உழவர் உதவியங்களில் ஆன் லைன் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் நெல் மாதிரியை, கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து காண்பித்து ஏற்றுக் கொள்ளப்பட்டப் பின்னர், நெல்லை கொண்டு வந்து விற்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News