உள்ளூர் செய்திகள்
தீ

காரைக்கால் துறைமுகத்தில் தீ விபத்து- விசைப்படகில் ரூ.20 லட்சம் பொருட்கள் நாசம்

Published On 2022-01-30 16:59 IST   |   Update On 2022-01-30 16:59:00 IST
காரைக்கால் துறைமுகத்தில் விசைப்படகு திடீரென்று தீ பற்றி எரிந்தது. மீனவர்கள் தீயை அணைக்க முயன்று, முடியாமல், தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

காரைக்கால்:

காரைக்கால் அரசலாறு, முல்லையாறு கலக்கும் கடற்கரையோரம் மாவட்ட மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கு, காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவகிராமத்தைச்சேர்ந்த கலைமணி என்பவருக்கு சொந்தமான சிவரஞ்சனி என்கிற விசைப்படகு, நேற்று அதிகாலை, வழக்கம்போல் ஆழ்கடலில் மீன் பிடித்துவிட்டு கரை திரும்பியது.

சிறிது நேர ஓய்வுக்கு பிறகு, விசைப்படகில் உள்ள மீனை விற்பனை தளத்திற்கு இறக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக, விசைப்படகு திடீரென்று தீ பற்றி எரிந்தது. மீனவர்கள் தீயை அணைக்க முயன்று, முடியாமல், காரைக்கால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், விசைப்படகில் எரிந்து கொண்டிருந்த தீயை மற்ற படகிற்கு பரவாமல் போராடி அணைத்தனர்.

இருந்த போதிலும் விசைப்படகில் உள்ள இன்ஜின், மீன், வலை மற்றும் மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து மின்கசிவு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து, நிரவி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News