உள்ளூர் செய்திகள்
மின்துறை தனியார் மயத்தில் என்.ஆர்.காங். நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் கேள்வி
மின்துறை தனியார் மயத்தில் என்.ஆர்.காங். நிலைப்பாடு என்ன? என்பது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை யூனியன் பிரதேச மின் துறையை மத்திய அரசு தனியாருக்குத் தாரைவார்க்க திட்டமிட்டதை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போதே கடுமையாக எதிர்த்தது.
சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றி அனுப்பியது. மத்திய மந்திரிகளை நேரடியாக சந்தித்து தனியார் மய முயற்சியை கைவிடும்படி கோரிக்கை வைத்தது.
மாநில அரசின் உரிமையை மத்திய அரசு கையில் எடுக்கக் கூடாது என்பதே காங்கிரசின் நிலைப்பாடு. மின்துறை தனியார் மயத்தை கண்டித்து ஊழியர்கள் ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஆனால் மத்திய அரசு இதைப்பற்றி கவலையின்றி பெரு வணிக கூட்டாளிகளில் ஒருவருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
குறைந்த மின் இழப்பு, அதிக லாபத்துடன் புதுவை மின்துறை செயல்படுகிறது. இதை தனியாருக்கு ஒப்படைப்பதை மக்கள் நலன் பற்றி சிந்திப்பவர்கள் ஏற்க மாட்டார்கள். மின்துறை தனியார்மயமானால் மின்கட்டணம் அடிக்கடி உயரும். இலவச மின்சாரம் நிறுத்தப்படும்.
தமிழ்தெரியாதவர்கள் மின்துறை ஊழியர்களாக சேர்க்கப்படுவர். புதுவை இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படும். அரசு ஊழியர்கள் தனியார் நிறுவனத்தின் கீழ் வேலை செய்ய வேண்டும். இப்பிரச்சினையில் என்.ஆர்.காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? என மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.