உள்ளூர் செய்திகள்
கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை வழங்க வேண்டும்-வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்
கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை வழங்க வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கனமழையால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு அரசால் எந்த விதமான உதவியும் இதுவரை வழங்கப்படவில்லை. மத்திய அரசிடம் மழை நிவாரணம் பெறுவதற்கான நடவடிக் கையை புதுவை அரசு எடுக்கவில்லை. எனவே, உரிய நடவடிக்கைகளை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவித்த நிவாரணத்தை வழங்க வேண்டும்.
அரும்பார்த்தபுரத்தில் இருந்து புதுவை 100 அடி சாலை ரெயில்வே மேம்பாலத்தை இணைக்கும் ஏரிக்கரை சாலைப்பணி முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் விழுப்புரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், ஏரிக்கரை இணைப்பு மேம்பாலமும் மூடப்பட்டு பயனற்று கிடக்கிறது. எனவே உடனடியாக அரசு ஏரிக்கரை சாலையை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
காமராஜர் மணிமண்டபம், மேரி கட்டிடம் ஆகியவை பிரதமரால் திறந்து வைக்கப்பட்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. எனவே திறந்த அனைத்து கட்டிடங்களையும் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
தனியார் மயமாக்குவதற்கு மின்துறையின் சொத்து மதிப்பை வெறும் ரூ.500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மின்துறை தனியார் மயமானால் ஏழைகள், வியாபாரிகள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே மின்துறை அரசிடமே இருக்க வேண்டும்.
இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. அறிக்கையில் கூறியுள்ளார்.