உள்ளூர் செய்திகள்
வாரிசு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை சிறுபான்மை மக்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்- ரங்கசாமியிடம் எம்.எல்.ஏ.க்கள் மனு
வருவாய்துறை மூலம் வாரிசு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை சிறுபான்மை மக்களுக்கும் விரிவு படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.
புதுச்சேரி :
புதுவை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, நாக.தியாகராஜன் ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
புதுவை அரசின் வருவாய் துறை மூலம் வாரிசு சான்றிதழ் வழங்கப்படும் என சட்டசபையில் அறிவித்து அது தற்போது நடைமுறையில் இருக்கிறது.
இந்த அறிவிப்பின் மூலம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இது வரவேற்புக்குரியது. மேலும் பாராட்டுக்குரியது.
அதுபோல் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
இதனை ஏற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி உடனடியாக வருவாய்துறை சிறப்பு செயலாளரும், மாவட்ட கலெக்டருமான வல்லவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாரிசு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை இஸ்லாமியர்களும், கிறிஸ்த வர்களும் பயன்பெறும் வகையில் செய்திட உத்தரவு பிறப்பித்தார்.