உள்ளூர் செய்திகள்
ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடிக்கப்படும் வீடுகள்.

சிட்லபாக்கம் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 417 வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது- பொதுமக்கள் போராட்டம்

Published On 2022-01-28 17:12 IST   |   Update On 2022-01-28 17:12:00 IST
வீடுகளை இடிக்க வந்த ஜே.சி.பி. எந்திரங்களை சிறைபிடித்தனர். பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

தாம்பரம்:

சென்னை சிட்லபாக்கம் ஏரியை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு இருந்தன.

இந்தநிலையில் சிட்லபாக்கம் ஏரியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி பொதுப்பணித் துறை சார்பில் சிட்லபாக்கம் ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளைஅளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

அதன்படி ஏரியில் இருந்து 71 அடி ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டு இருந்த 417 வீடுகளை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் சிட்லபாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 417 வீடுகளை இடித்து அப்புறப்படுத்தும் பணி இன்று தொடங்கியது. முதல்கட்டமாக இன்று 14 வீடுகளை இடிக்கும் பணியை பொதுப்பணி துறை என்ஜினீயர் பிரபு, தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி, தாம்பரம் வட்டாட்சியர் பாலாஜி ஆகியோர் மேற்கொண்டனர்.

அங்கு ஜே.சி.பி. எந்திரம் கொண்டு வரப்பட்டு ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி தொடங்கியது. வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடுகளை இடிக்க வந்த ஜே.சி.பி. எந்திரங்களை சிறைபிடித்தனர். பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதனைத்தொடர்ந்து தாம்பரம் போலீஸ் துணை கமி‌ஷனர் குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

மேலும் தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா மற்றும் அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

ஆனாலும் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்தி ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Similar News