உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ஜிப்மர் இயக்குனரை மாற்ற வேண்டும்- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

Published On 2022-01-28 04:00 GMT   |   Update On 2022-01-28 04:00 GMT
மருத்துவமனை சீர்கேட்டுக்கு காரணமான ஜிப்மர் இயக்குனரை மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு புகார் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

ஜிப்மர் மருத்துவமனை தற்போது நிர்வாக சீர்கேட்டினால் தரம் குறைந்து சீர்குலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 6 மாத காலமாக உயிர் காக்கும் மருந்துகள் முதல் சாதாரண வைட்டமின் சத்து  மாத்திரைகள் வரை இருப்பு இல்லை. இதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள் படும் துயரம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது.

கொரானாவை காரணம் காட்டி இதர மருத்துவ  பிரிவுகளை மூடுவது எந்த மத்திய அரசு மருத்துவமனையிலும் இல்லாத நடைமுறை. இதற்கு ஜிப்மர் நிர்வாகத்திற்கு யார் அனுமதி அளித்தது.   ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பதிவு செய்ய  ஏழை மக்களிடம் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க ஆரம்பித்து உள்ளனர். இதற்கு மறைமுகமாக ஜிப்மர் நிர்வாகமும் உடந்தையாக உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ.400 கோடி நிதியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது.   இயக்குனரின் திறமையற்ற நிர்வாகத்தால் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாக சீர்கேடு அடைந்து வருகிறது. இவை அனைத்துக்கும் காரணமான இயக்குனரை உடனடியாக பணி மாற்றம் செய்ய வேண்டும். 

நிதி முறைகேடு, ஊழல் சம்பந்தமாக விசாரித்து சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகத்தரம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனை  சீர்கேடு அடைந்து வருவதை  புதுவை மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.  உடனடியாக நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தவறினால், அனைத்துப் பகுதி மக்களையும் இணைத்து  போராடுவோம்.
 
இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News