உள்ளூர் செய்திகள்
குடியரசு தினவிழா

காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டில் குடியரசு தினவிழா- கலெக்டர்கள் தேசியகொடி ஏற்றி நலத்திட்ட உதவி

Published On 2022-01-26 15:58 IST   |   Update On 2022-01-26 15:58:00 IST
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

காஞ்சிபுரம்:

நாட்டின் 73-வது குடியரசு தின விழா காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் மைதானத்தில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து மூவர்ண பலூனை கலெக்டர் ஆர்த்தி பறக்கவிட்டார். பின்னர் சிறப்பாக அரசுத்துறையில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், வருவாய் அலுவலர் பன்னீர் செல்வம், கோட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கமி‌ஷனர் நாராயணன் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு எதிரே அமைந்துள்ள மாவட்ட இணைப்பதிவாளர் அலுவலகத்தில் மண்டல இணைப் பதிவாளர் லட்சுமி தேசிய கொடி ஏற்றினார். துணைப் பதிவாளர் தயாளன், கண்காணிப்பாளர்கள் சிவமணி, அருண்குமார், சத்தியநாராயணன், சரளா, ரகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் அளவூர் நாகராஜன் மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரில் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பத்மநாபன், அன்பு, மணிகண்டன், சுமங்கலி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் வங்கி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். மேலாண்மை இயக்குனர் முருகன், பொது மேலாளர் விஜயகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் வண்ணப் பலூன் மற்றும் சமாதான புறாக்களை பறக்க விட்டார்.

இதைத்தொடர்ந்து அரசின் பல்வேறு துறையின் கீழ் 34 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 91 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.விழாவில் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 26 போலீசா ருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் கொரோனா தொற்றில் சிறப்பாகப் பணியாற்றிய 78 அலுவலர்களுக்கும் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 188 பேருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமார், பயிற்சி கலெக்டர் அனாமிகா, மாவட்ட திட்ட அலுவலர் ஜெயக்குமார், சுகாதார துறை துணை இயக்குனர் ஜவகர்லால், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இயேசுதாஸ், மீனாட்சி, கலெக்டரின் நேர்முக உதவி யாளர் வித்யா,கோட்டாட்சியர் ரமேஷ் வட்டாட்சியர் செந்தில்குமார் திருவள்ளூர் துணை சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடை பெறவில்லை.

மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் அவர்களது வீடு தேடி சென்று கவுரவித்தனர்.

ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி டி.எஸ்.பி. அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்தார். போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தேசிய கொடியை ஏற்றினார்.

குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் வக்கீல்கள் சங்க தலைவர் சீனிவாசன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். இதில் செயலாளர் மகேந்திரன், பொருளாளர் கன்னியப்பன், அரசு வழக்கறிஞர் வெஸ்லி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரூ ராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மாலா தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

செங்கல்பட்டில் உள்ள அரசினர் தொழில் பயிற்சி நிலைய வளாக மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து நலதிட்ட உதவிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வழங்கினார்.

நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ் பங்கேற்றனர். காட்டாங் கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் உதயாகருணாகரன் தேசிய கொடியை ஏற்றினார். இதில் துணை தலைவர் ஆராமுதன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாய்கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

Similar News