உள்ளூர் செய்திகள்
சுருக்கெழுத்தர் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சம்பத் எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி

சுருக்கெழுத்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்-ரங்கசாமியிடம் மனு

Published On 2022-01-25 13:57 IST   |   Update On 2022-01-25 13:57:00 IST
சுருக்கெழுத்தர் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சம்பத் எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
புதுச்சேரி:

அரசு அலுவலகங்களில் சுருக்கெழுத்தர் காலிபணியிடங்களை விரைந்து நிரப்ப வலியுறுத்தி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

 புதுவையில் பல்வேறு துறைகளில் பல ஆயிரம் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. அதில் குறிப்பாக சுருக்கெழுத்தர் பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.

ஒவ்வொரு அலுவலகத்திலும் கோப்புகள் தயாரிக்கும் பணியிலும், துறை சார்ந்த ஆய்வுகூட்டங்கள், கருத்தரங்குகள் நடை பெறும் நேரங்களில் உயரதிகாரிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பவர்கள் சுருக்கெழுத்தர்கள். இவர்களின் தேவை ஒவ்வொரு துறை அலுவல கத்திலும் நீதிமன்றத்திலும் அதிகமாக உள்ளது. அரசு நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பணியிடங்கள் 2016 முதல் இதுநாள் வரை நிரப்பப்படாமல் உள்ளது.

12.1.2016&ல் 41 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. ஆனால் அப்போது  தேர்தல் அறிவிக் கப்பட்டதால் கைவிடப்பட்ட நிலையில் பின்னர் 24.4.2017, 30.7.2020 மற்றும் 4.2.2021 என்று தொடர்ச்சியாக அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டன. ஆனால் அதன் தொடர்ச்சி இல்லாமல் கைவிடப்பட்டது. 

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 50 சுருக்கெழுத்து காலி 
பணியிடங்கள் உருவாகின்றன. இதனால் ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் கோப்புகள் தயார் செய்வது உள்ளிட்ட நிர்வாக பணிகள் ஸ்தம்பித்து நிற்கின்றன.  அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் 500&க்கும் மேற்பட்ட சுருக்கெழுத்தர் தேர்வாகி வெளியே வருகின்றனர்.

இவர்களுக்கும் தகுதியான வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே காவலர் பணியிடங்கள் நிரப்புவதற்கு தாங்கள் எடுத்த முயற்சியை போன்று  சுருக்கெழுத்தர் காலி 
பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கையை  விரைந்து எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Similar News