உள்ளூர் செய்திகள்
தொடர் விடுமுறையால்: விளையாட்டில் ஆர்வம் காட்டும் மாணவர்கள்
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் விளையாட்டில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் முறையான சம்பளத்தை தர முன் வருவதில்லை. இதனால் அன்றாட தேவைக்கு முறையான வருமானம் இல்லாததால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூலி வேலைக்கு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் திருபுவனை பகுதியில் கிராமப்புற மாணவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தி வருகின்றனர். இப்பகுதி மாணவர்கள் கபடி விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
கிரமப்பறங்களில் உள்ள பெற்றோர்கள் தங்களது அன்றாட தேவைக்காக அதிகாலையிலே கூலி வேலைக்கு சென்று விடுகின்றனர். மாலையில் தான் அவர்கள் வீடு திரும்புகிறார்கள்.
இதனால் வீட்டில் இருக்கும் மாணவர்கள் உணவு, உடை, பாதுகாப்பு தன்மையை இழந்து வருகிறார்கள். சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்று பொழுது போக்கி வருகிறார்கள்.
கடந்த 2 ஆண்டு காலமாக பள்ளிக்கு செல்லாமல், படிக்காமல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்வி அறிவில் பின்தங்கி வருவது வேதனைக்குரிய செயலாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.