உள்ளூர் செய்திகள்
ஜிப்மரில் புதுவை மக்களுக்கு சிகிச்சை மறுக்கப்படாது - கவர்னர் தமிழிசை உறுதி
புதுவை மக்களுக்கு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அவசர, அவசியமான சிகிச்சைகளுக்கு மறுக்கப்படாது என கவர்னர் தமிழிசை உறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பிறகு கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் பரிசோதனை செய்வதே இல்லை. பெரும்பாலானவர்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக தொற்றால் பலியானோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சிகிச்சை தரப்படும் என்றும், மற்ற சிகிச்சைகளுக்கு தொலை மருத்துவ சேவை வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்தது. ஜிப்மர் மருத்துவமனைக்கு நாள்தோறும் புதுவை மட்டுமின்றி, தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற வருவார்கள்.
இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என புகார் எழுந்தது. இதையடுத்து ஜிப்மர் இயக்குனர் மற்றும் அதிகாரிகளை அழைத்து கவர்னர் தமிழிசை பேசினார். ஜிப்மரில் புறநோயாளிகள் சிகிச்சை சேவைகள் தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி லாஸ்பேட்டையில் உள்ள அவரின் சிலைக்கு கவர்னர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா சூழலில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இருப்பதை போலவே புதுவையிலும் தொற்று அதிகரித்திருக்கிறது. புதுவையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு விடக்கூடாது என்பதற் காக தளர்வுகளோடு கூடிய அடைப்பு அறிவிக்கப்பட்டது. பிற மாநிலங்களில் முழு அடைப்பு இருக்கிறது.
மக்கள் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்தால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதற்காகதான் புதுவையில் தளர்வுகளோடு கூடிய அடைப்பு அறிவிக்கப்பட்டது. மக்கள் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்ற கோரிக்கையோடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. நோய்த் தொற்று அதிகம் இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பது மிகவும் ஆறுதலான செய்தி. மேலும், இணைநோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மரணம் ஏற்பட்டிருக்கிறது.
புதுவை மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் புதுவை அரசு எடுத்து வருகிறது. ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிரமங்கள் இருப்பதாக அறிந்து அதிகாரிகளுடன் பேசினேன். ஜிப்மர் இயக்குனர் மற்றும் நிர்வாகிகள் என்னை நேற்று சந்தித்து விளக்கம் அளித்தார்கள். 60 சதவீதத்துக்கும் மேலாக மருத்துவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் அதனால் சாதாரண அறிகுறிகளோடு வரும் நோயாளிகளை முழுமையாக கவனிக்க இயலவில்லை என்றும் தெரிவித்தார்கள்.
எத்தகைய சூழ்நிலையிலும் நோயாளிகள் பாதிப்பு அடையாத வகையில் மருத்துவ சேவையை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவர்களும் உறுதி அளித்துள்ளனர். எனவே அவசர சிகிச்சையும், அவசியமான சிகிச்சையும் ஜிப்மர் மருத்துவமனையிலும் மற்றும் புதுவையில் உள்ள பிற மருத்துவமனைகளிலும் மறுக்கப்படாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.