உள்ளூர் செய்திகள்
உயிரிழந்த தாய் குரங்கை தட்டி எழுப்ப முயன்ற குட்டிகள்

காரில் சிக்கி இறந்த தாய் குரங்கை தட்டி எழுப்ப முயன்ற குட்டிகள்

Published On 2022-01-21 18:04 IST   |   Update On 2022-01-21 18:04:00 IST
மாமல்லபுரத்தில் காரில் சிக்கி உயிரிழந்த குரங்கை சுற்றி வந்த குட்டி குரங்குகள் தடவி கொடுத்தும், கண்ணீர் விட்டும், தட்டி எழுப்ப முயற்சித்தும் பாச போராட்டம் நடத்தியது.
மாமல்லபுரம்:

மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலம் அருகே உள்ள சப்தகன்னி கோவில் வளாகத்தில் உள்ள பழமையான மரத்தில் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன.

நேற்று மாலை பெரிய குரங்கு ஒன்று கிழக்கு ராஜ வீதி சாலையை உணவுக்காக  கடக்க முயன்றது. அந்நேரத்தில் எதிரில் வந்த காரின் சக்கரத்தில் குரங்கு சிக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே குரங்கு  இறந்து போனது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் தாய் குரங்கு பலியானதை கண்ட அதன் குட்டி குரங்குள் மற்றும் அதன் கூட்டத்தில் இருந்த ஏராளமான குரங்குகள் அங்கு வந்தன.

அவை இறந்து கிடந்த குரங்கை சுற்றி சுற்றி வந்தன. மேலும் பலியான குரங்கை பரிதாபத்துடன் தடவி கொடுத்தும், கண்ணீர் விட்டும், தட்டி எழுப்ப முயற்சித்தும் பாச போராட்டம் நடத்தியது.

இதனை கண்ட அவ்வழியே சென்றவர்கள் கண் கலங்கினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் பேரூராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் இறந்த குரங்கை மீட்டு அருகில் உள்ள வருவாய் ஆய்வாளர் வளாகத்தில் குழிதோண்டி புதைத்தனர். முன்னதாக அந்த குரங்குக்கு பாலூற்றி, பிடித்த உணவை படைத்தும், மாலையிட்டு இறுதி சடங்கு செய்தனர். பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் ஏராளமானோர் குரங்கிற்கு அஞ்சலி செலுத்தினர்.

அந்த இடத்திலும் இறந்து போன குரங்கின் குட்டிகள் மற்றும் ஏராளமான குரங்குகள் சுற்றி வந்தன. இந்த காட்சிகள் அங்கிருந்த மக்களின் நெஞ்சை கனக்க செய்தது.

Similar News