உள்ளூர் செய்திகள்
பல்லாவரம் ரேடியல் சாலையில் தடுப்பு சுவரில் மோதிய கார் தீப்பிடித்து எரிந்தது
பல்லாவரம் ரேடியல் சாலையில் தடுப்பு சுவரில் மோதிய கார் தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள செம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன்(வயது 30). இவர், துரைப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். குரோம்பேட்டை பெரிய ஏரி அருகே ரேடியல் சாலையில் வரும்போது திடீரென சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் கார் மோதியது.
இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. திடீரென காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக லோகேஸ்வரன் காரில் இருந்து கீழே இறங்கிவிட்டார். பின்னர் தீ அணைக்கப்பட்டது. எனினும் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. இதுபற்றி சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.