உள்ளூர் செய்திகள்
நடுக்கடலில் மீட்கப்பட்ட நாட்டுப்படகு.

நடுக்கடலில் படகு மூழ்கி மீனவர் பலி

Published On 2022-01-19 09:38 GMT   |   Update On 2022-01-19 09:38 GMT
அறந்தாங்கி அருகே காற்றின் வேகம் காரணமாக நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் பலியானார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் வன்னிச்சியேந்தல் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் நாட்டுப்படகு மீனவர் தவசிமணி (வயது 56). இவர் 17&ந்தேதி மாலை கோட்டைப்பட்டினத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். 

அப்போது கடலில் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால், படகு அலைக்கழிக்கப்பட்டு உள்ளது. இதில் நிலை தடுமாறிய படகு கவிழ்ந்ததில், தவசிமணி  கடலில் விழுந்து மாயமானார். 

இதற்கிடையே நேற்று காலை கரை திரும்ப வேண்டிய சூழ்நிலையில் மதிய வேளை ஆகியும் கரை திரும்பாததைக் கண்டு பதறிய உறவினர்கள் கடலோர காவல் படைக்குத் தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் சக மீனவர்களின் உதவியுடன் கடலோர காவல் படையினர் நேற்று மாலை இருள் சூழும் வரை மாயமான மீனவரை தேடும் பணியல் ஈடுபட்டனர். 

இந்தநிலையில் வடக்கு புதுக்குடியில் பாய்மரப்படகு போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அம்மாபட்டினம் கடற்கரையிலிருந்து 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் தவசுமணியின் உடல் மிதந்ததை சக மீனவர்கள் பார்த்து உள்ளனர். 

உடனடியாக அந்த உடலை மீட்ட மீனவர்கள் கரை சேர்த்தனர். இறந்த மீனவரின்  உடல் தற்போது மணமேல்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று காற்றின் வேகம் காரணமாக தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News