உள்ளூர் செய்திகள்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும்- அமைச்சர் தகவல்

Published On 2021-12-28 08:29 GMT   |   Update On 2021-12-28 09:55 GMT
தமிழகம் முழுவதும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து பாதுகாப்பு இல்லாத கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி 1,500 பள்ளி கட்டிடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை இடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை:

ஒமைக்ரான் பரவி வருவதால் பொதுத் தேர்வு கடந்த ஆண்டைபோல ரத்தாகி விடுமோ என்ற அச்சம் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் ஒமைக்ரான் தாக்கம் வேகமாக இருக்கும் எனவும் மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் திருப்புதல் தேர்வுகள் நடைபெறுமா? என்பது கேள்வி குறியாக உள்ளது.

ஆனால் கல்வித்துறை இதுவரையில் பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிடவில்லை. திருப்புதல் தேர்வு தேதியும் அறிவிக்கவில்லை. மார்ச் மாதத்திற்குள் பொதுத் தேர்வு மாணவர்களை தயார்படுத்த வேண்டிய நிலையில் ஒமைக்ரான் பரவி வருவதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பதற்றம் காணப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது, மாணவர்களுக்கு 2 திறனறிவு தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 


திருப்புதல் தேர்வு நடத்த தயாராக இருக்கிறோம். ஒருவேளை பொதுத் தேர்வு ரத்தானால் கூட நடத்தி முடிக்கப்பட்டுள்ள தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிட்டு தேர்ச்சி அளிக்கலாம் என்றார்.

இந்த நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கல்வித்துறை சார்ந்த தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து பாதுகாப்பு இல்லாத கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி 1,500 பள்ளி கட்டிடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை இடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை அளிக்க அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்படும். நடப்பு கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும். ஜனவரி முதல் வாரத்தில் திருப்புதல் தேர்வு தொடங்கி விடும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... புதுச்சேரியிலும் நுழைந்தது ஒமைக்ரான்

Tags:    

Similar News