உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பொதுமக்கள் தயங்காமல் புகார் கொடுக்க வேண்டும்- போலீசார் அறிவுறுத்தல்

Published On 2021-12-28 07:24 GMT   |   Update On 2021-12-28 07:24 GMT
கடந்த 2020ல் நாட்டில் சைபர் குற்றங்கள் தொடர்பாக 50 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருப்பூர்:

தகவல் தொழில்நுட்ப சேவைகளை முறைகேடாக பயன்படுத்துதல், இ-மெயில் மற்றும் இன்டர்நெட் கால் மூலம் மிரட்டுதல், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மோசடி செய்தல், கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து தகவல்கள் திருடுதல், பிறரது தகவல் மற்றும் புகைப்படங்களை தவறாக பயன்படுத்துதல் போன்ற ‘சைபர்’ குற்றங்கள் அதிகரித்துள்ளன.

சமூக வலைதளங்கள் மூலம் அவதூறு பரப்பும் செயல்கள் அதிகமாகிவிட்டன. சில நாட்களாக பல்லடம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதாக வெளியான வதந்தி இந்த வகையை சேர்ந்ததுதான். 

திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை காட்டி பெண்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்தல், வங்கி அதிகாரி பேசுவதாகக்கூறி விவரங்களைப்பெற்று வாடிக்கையாளர் பணத்தை திருடுதல் போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. 

இதுதொடர்பாக காவல் நிலையங்களில், அதிகளவில் புகார்கள் குவிகின்றன.

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்திலும் இத்தகைய புகார்கள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் பல்வேறு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாதவையாக இருக்கின்றன. இதற்கு காலம் தாழ்த்தி அளிக்கப்படும் புகார் மற்றும் குற்றவாளிகள் நூதனமாக குற்றங்களை மேற்கொள்ளுதல் போன்றவை காரணங்களாக இருக்கின்றன.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 

‘’கடந்த 2020ல் நாட்டில் சைபர் குற்றங்கள் தொடர்பாக 50 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 11.8 சதவீதம் அதிகமாகும்.  

ஆன்லைன் மூலம் பெறப்படும் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், சமூக வலைதளக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வசதியாக போலீசாருக்கு கணினித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்கில் விரைந்து புலன்விசாரணை மேற்கொள்ளவும் சந்தேகமின்றி துல்லியமாக குற்றம்புரிந்தவர்களை அடையாளம் காணவும் சென்னையில் ‘சைபர் தடயங்கள் ஆய்வகம்‘ அமைக்கப்படுகிறது. 


இதுபோன்ற வசதிகள் எதிர்காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அமையும். சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது திருப்பூர் மாவட்ட மக்கள் தயங்காமல் புகார் கொடுக்கலாம். 

குறிப்பாக இதற்கான தொழில்நுட்பரீதியான ஆதாரங்கள் இருந்தால் நல்லது. சைபர் குற்றவாளிகளின் பிடியில் ஏமாறாமல் இருக்க ஒவ்வொருவரிடமும் விழிப்புணர்வு அவசியம் என்றனர். 
Tags:    

Similar News