உள்ளூர் செய்திகள்
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன்

விருதுநகரில் ரெயில் முன் பாய்ந்து சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

Published On 2021-12-26 09:22 IST   |   Update On 2021-12-26 09:22:00 IST
விருதுநகர் அருகே சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்த காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சூலக்கரை மார்டன் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 48). இவர் விருதுநகர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார்.

இவரது மனைவி பானுமதி சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு சஜேஷ் நாராயணன் என்ற மகனும், தன்யா என்ற மகளும் உள்ளனர்.

மகன் சென்னையில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். மகள் விருதுநகரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த ராதாகிருஷ்ணன், திடீரென தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் பின்புறம் சென்றார்.

அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தின் அருகே மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு நின்று கொண்டிருந்தார்.அப்போது அந்தவழியாக வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் முன் ராதாகிருஷ்ணன் திடீரென பாய்ந்தார். இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஓட்டுநர் விருதுநகர் ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு தூத்துக்குடி ரெயில்வே போலீசார் விரைந்தனர். அவர்கள் தண்டவாள பகுதியில் பிணமாக கிடந்த ராதாகிருஷ்ணன் உடலை மீட்டனர்.

முதலில் ராதாகிருஷ்ணன் அடையாளம் காணப்படவில்லை. அப்போது அவர் பிணமாக கிடந்த இடத்தின் அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று நின்றது. அதில் செல்போனும் இருந்தது. அதனை எடுத்து போலீசார் விசாரித்தபோதே தற்கொலை செய்தது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் என்பது தெரிய வந்தது.

ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ராதாகிருஷ்ணன் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சினை அல்லது பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று அவரது குடும்பத்தினரிட மும், உடன் பணிபுரிபவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அதன் காரணமாக அவர் தற்கொலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதித்து அவதிப்பட்டுள்ளார். இதனால் அதற்கு சிகிச்சையும் பெற்று வந்திருக்கிறார். இதன் காரணமாக வேதனையடைந்து தற்கொலை செய்தாரா? என்றும் விசாரணை நடத்தப்படுகிறது. 

Similar News