டிராக்டர் வாங்கிய கடன் தவணையை கட்ட முடியாததால் விவசாயி தற்கொலை
விருதுநகர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள விழுப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 44). விவசாயியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் வாங்கி 2 டிராக்டர்களை வாங்கியுள்ளார். அதன் பின் விவசாயம் சரியாக நடைபெறவில்லை. இதனால் பன்னீர்செல்வத்தால் கடன் தவணையை சரியாக செலுத்த முடியவில்லை.
இதில் விரக்தி அடைந்த பன்னீர்செல்வம் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (69). நோய்க் கொடுமை காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த இவர் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சுழி அருகே உள்ள பி. புதுப்பட்டியை சேர்ந்தவர் லிங்கம் (35). இவர் 2 திருமணம் செய்திருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக 2 மனைவிகளும் பிரிந்து சென்றுவிட்டனர். இதில் விரக்தி அடைந்த லிங்கம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூமா பட்டியைச் சேர்ந்த கணேசன் (32). இவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த கணேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (48) என்பவரும் நோய் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார்.