செய்திகள்
மணல் மூட்டைகள் நிரப்பும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

ஒரத்தூர் ஏரிக்கரை உடைந்து 3-வது நாளாக வெளியேறும் தண்ணீர்

Published On 2021-11-30 05:15 GMT   |   Update On 2021-11-30 05:15 GMT
ஒரத்தூர் ஏரிக்கரை உடைந்து 3-வது நாளாக தண்ணீர் வெளியேறுகிறது. உடைப்பு பகுதியில் மணல்மூட்டைகளை அடுக்கும் பணி நடந்து வருகிறது.
படப்பை:

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அடுத்த ஒரத்தூர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணியின் கீழ் ஒரத்தூர் ஆற்றின் குறுக்கே ரூ.60 கோடி செலவில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி முழுமையாக முடிவடையாமல் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நீர்த்தேக்கம் பகுதியில் உள்ள ஏரியின் கரை 2 நாட்களுக்கு முன்னர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியில் இருந்து அதிக அளவு நீர் வீணாக வெளியேறுகிறது.

ஏரியின் கரை உடைந்து நீர் வெளியேறி வரும் பகுதியில் படகு மூலம் மணல் மூட்டைகள் எடுத்து சென்று கரை உடைந்த பகுதியில் சவுக்கு கட்டைகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தி மணல் மூட்டைகள் அடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழையின் காரணமாக கரை உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைக்கும் பணி முழுமையாக முடியாமல் உள்ளது. இதனால் ஏரியில் இருந்து நீர் தொடர்ந்து 3-வது நாளாக வெளியேறி வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறுகையில்:-

ஏரியின் கரை உடைந்த பகுதியில் அதிக அளவில் நீர் செல்வதால் படகு மூலம் மணல் மூட்டைகள் எடுத்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் அடுக்கும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளைக்குள் உடைந்த கரை பகுதியில் விரைந்து மணல் மூட்டைகள் அடுக்கி சீரமைக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.
Tags:    

Similar News