செய்திகள்
தக்காளி

உச்சத்தில் இருந்த தக்காளி விலை கிடுகிடு சரிவு- 1 கிலோ ரூ.50-க்கு விற்பனை

Published On 2021-11-26 05:32 GMT   |   Update On 2021-11-26 11:41 GMT
தொடர் மழையால் தக்காளியை உடனுக்குடன் பறித்து லாரியில் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. தக்காளி செடிகளும் தண்ணீரில் மூழ்கியது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்ததால் தக்காளி விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது.
சென்னை:

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டது.

தொடர் மழையால் தக்காளியை உடனுக்குடன் பறித்து லாரியில் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. தக்காளி செடிகளும் தண்ணீரில் மூழ்கியது.

இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்ததால் தக்காளி விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது.

கடந்த வாரம் ரூ.60, 70-க்கு விற்கப்பட்ட 1 கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ.140 வரை விலை உயர்ந்தது.

வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 80 லாரிகளில் 
தக்காளி
 விற்பனைக்கு வரும். ஆனால் விலை உச்சத்தில் இருந்த சமயங்களில் 30 லாரிகள் அளவுக்குதான் தக்காளி வந்தது. இதனால் ரூ.70-க்கு விற்கப்பட்ட 1 கிலோ தக்காளி ரூ.140 வரை உச்ச விலையில் விற்கப்பட்டது.

வட மாநிலங்களில் மழை சற்று குறைந்ததால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று 45 லாரிகளில் தக்காளி வந்தது. இதனால் 1 கிலோ தக்காளி ரூ.30 வரை குறைந்து ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்பட்டது.

இன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 50 லாரிகளில் தக்காளி வந்தது. இதனால் தக்காளி விலை மேலும் 30 ரூபாய் வரை குறைந்தது.



கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் 1 கிலோ 
தக்காளி
 ரூ.40-க்கு விற்கப்பட்டது. இதை வாங்கி விற்கும் சில்லறை கடைக்காரர்கள் 10 ரூபாய் லாபம் வைத்து 1 கிலோ தக்காளியை 50 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.

அயனாவரத்தில் உள்ள காய்கறி கடைகளில் 50 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலை மேலும் குறையும் என்று பேரமைப்பு மாவட்டத் தலைவர் சாமுவேல் தெரிவித்தார்.

Tags:    

Similar News