செய்திகள்
மழை

உடையார்பாளையம் பகுதியில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Update: 2021-11-23 11:53 GMT
மழையால் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல முடியாமலும், வயல் வேலை செய்ய முடியாமலும் தவித்தனர். வியாபாரம் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் வருத்தத்தில் இருந்தனர். வேலைக்கு வெளியூர் செல்ல முடியாமல் தொழிலாளர்களும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் செல்ல முடியாமலும் பொதுமக்களும் தவித்தனர்.

மேலும் மழையால் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. வயல்வெளிகள், முந்திரி தோட்டங்கள் மற்றும் நிலங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கனமழையால் அனைத்து ஏரிகளும் கரையை ஒடைத்துக்கொண்டு ஓட தொடங்கியதால், சாலைகளிலும், வயல்வெளிகளில் மற்றும் தோட்டங்களிலும் எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு உடையார்பாளையம் மட்டுமின்றி கழுமங்கலம், முனையதரியன்பட்டி, கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், இடையார், சோழங்குறிச்சி, தத்தனூர், வெண்மான்கொண்டான், மணகதி, விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி, பருக்கள், காடுவட்டாங்குறிச்சி, நடுவலூர், கோட்டியால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்றும் அப்பகுதிகளில் மழை பெய்தது.
Tags:    

Similar News