செய்திகள்
கைது

அழகு நிலையத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: பிளஸ்-2 மாணவி-தாயார் போக்சோ சட்டத்தில் கைது

Published On 2021-11-16 11:49 IST   |   Update On 2021-11-16 11:49:00 IST
காரைக்குடி அழகு நிலையத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை ரோடு பகுதியில் அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் பொறுப்பாளராக செயல்பட்டு வருபவர் லட்சுமி. இவரது 17 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். தாயார் பணியாற்றி வரும் அழகு நிலையத்திற்கு தனது சக தோழிகளை அடிக்கடி அழைத்து வருவது வழக்கம்.

சிகை அலங்காரம், புருவம் சீர்செய்தல் உள்ளிட்ட பல தேவைகளுக்கு மாணவிகள் அடிக்கடி அழகு நிலையம் சென்றுள்ளனர்.

அப்போது அழகு நிலையத்தில் பணியில் இருந்த சிலர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுபற்றி வெளியே தெரிந்தால் அவமானம் என கருதி பாதிக்கப்பட்ட மாணவிகள் யாரிடமும் தெரிவிக்காமல் விட்டுவிட்டனர்.

இந்த நிலையில் ஒரு மாணவி தனது தந்தையிடம் பாலியல் தொந்தரவு குறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது.



அதன்பேரில் அழகு நிலைய பொறுப்பாளர் லட்சுமி, அவரது 17 வயது மகள், அங்கு பணியாற்றிய விக்னேஸ்வரன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும், முக்கிய குற்றவாளியான தப்பியோடிய மான்சில் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்திற்கு தப்பி சென்றிருக்கலாமா? என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். அவர் சிக்கினால்தான் இந்த பாலியல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளி யார்? எவ்வளவு நாட்களாக இதுபோன்று மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு நடைபெற்றுள்ளது என்பது பற்றிய விவரங்கள் தெரியவரும்.

இதற்கிடையே பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிகள் படித்த பள்ளி நிர்வாகத்திற்கு இதுபற்றி முன்பே தகவல் கிடைத்துள்ளதாகவும், அவர்கள் போலீசுக்கு தெரிவிக்காமல் மாணவிகள் மற்றும் அவர்களை சரியாக கண்காணிக்க தவறியதாக ஆசிரியைகளிடமும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பள்ளி நிர்வாகம் ஒரு ஆசிரியையை சஸ்பெண்டு செய்ததோடு, 2 மாணவிகளுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து நடவடிக்கை மேற்கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன்? என்பது மர்மமாக உள்ளது.

இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News