செய்திகள்
மு.க. ஸ்டாலின்

கொளத்தூரில் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Published On 2021-11-02 18:09 IST   |   Update On 2021-11-02 18:09:00 IST
சென்னை கொளத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கல்லூரியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
சட்டப்பேரவையில் 2021-22-ம் ஆண்டு அறநிலையத்துறை மானிய கோரிக்கையின்போது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் முதல்கட்டமாக சென்னை கொளத்தூர், திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 4 இடங்களில் பி.காம், பி.பி.ஏ.,பி.சி.ஏ., பி.எஸ்.சி. கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளை கொண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க கடந்த அக்டோபர் 6-ம்தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த 4 கல்லூரிகளில் சென்னை கொளத்தூரில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலப்பரப்பில் கல்லூரி தொடங்க உத்தேசிக்கப்பட்டது. இந்த நிலையில் கொளத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கல்லூரியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

பல்கலைக்கழக விதிகள்படி, கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான உதவிப் பேராசிரியர் நேர்முகத் தேர்வுக்கு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, கடந்த அக்.18-ம் தேதி நேர்காணல் நடத்தப்பட்டது. தகுதி, அனுபவம், மதிப்பெண் அடிப்படையில் 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் நூலகர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News