செய்திகள்
மேமோகிராம் கருவியை கனிமொழி எம்.பி பார்வையிட்ட போது எடுத்த படம்.

பெண்கள் அனைவரும் கட்டாயம் மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் - கனிமொழி அறிவுறுத்தல்

Published On 2021-11-01 03:24 GMT   |   Update On 2021-11-01 03:24 GMT
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாமில் 597 பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் ‘பிங்க் அக்டோபராக’ கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதன்படி பொதுமக்களிடையே மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பெண்களுக்காக மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் கடந்த மாதம் முழுவதும் நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை முகாமின் நிறைவு விழா, நேற்று கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமை தாங்கினார். ஆஸ்பத்திரி டீன் டாக்டர் சாந்திமலர், கதிரியக்கத்துறை தலைவர் டாக்டர் தேவி மீனாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது நர்சுகள், மார்பக பரிசோதனை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் கடந்த ஒரு மாத கால பரிசோதனை முகாமில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகள் குழுவினருக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாமில் 597 பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 18 பேருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 210 பெண்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் கடந்த 2½ ஆண்டுகளில் 8 ஆயிரத்து 433 பேர் மார்பக பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் 221 பேருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து, மார்பக புற்றுநோயை கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற்றுக்கொண்டால், முழுவதுமாக குணமடைந்து விட முடியும். எனவே பெண்கள் அனைவரும் தயக்கம் காட்டாமல், கட்டாயம் மார்பக பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். மார்பக புற்றுநோயை கண்டறியும், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ‘மேமோகிராம்’ கருவி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில்தான் உள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள பெண்கள் இந்த ஆஸ்பத்திரியில் மார்பக பரிசோதனையை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News