செய்திகள்
அயோடின் இல்லாத உப்பை வைத்திருந்த 8 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்
நாகை அருகே அயோடின் இல்லாத உப்பை வைத்திருந்த 8 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் அயோடின் இல்லாத உப்புகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து மாவட்டத்தில் உள்ள கடைகளில் ஆய்வு செய்யும் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் புஷ்பராஜ், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் நாகை அருகே பரவை மார்க்கெட்டில் உள்ள சில கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அயோடின் இல்லாத பதப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட உப்புகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அயோடின் இல்லாத உப்பை வைத்திருந்த 8 கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் கடைகளிலிருந்து 200 கிலோ அயோடின் இல்லாத உப்பையும் பறிமுதல் செய்தனர். அயோடின் இல்லாத உப்பை விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.