செய்திகள்
புதுச்சேரி சுற்றுலா தலம்

சுற்றுலா பயணிகளை குறி வைத்து கொடிகட்டி பறக்கும் விபசாரம்

Published On 2021-10-20 04:57 GMT   |   Update On 2021-10-20 04:57 GMT
ஆன்மிக பூமியான புதுச்சேரியில் விபசார தொழிலை ஒழித்து கட்ட போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
புதுச்சேரி:

சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக பெங்களூரு, சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து அதிக அளவில் மக்கள் வருகின்றனர்.

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் தங்களது பொழுதை கழிக்க பல்வேறு இடங்கள் உள்ளன. கடற்கரை சாலை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம், படகுகுழாம், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்கள் இருக்கின்றன.

புதுச்சேரியின் மதுபானத்துக்கு மது பிரியர்கள் மத்தியில் மவுசு அதிகம். இதற்காக தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிபவர்கள், தொழிலதிபர்கள் வார இறுதிநாட்களில் புதுவை வந்து ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ‘குறி’ வைத்து விபசார தொழில் கொடி கட்டி பறக்கிறது. சொகுசு தங்கும் விடுதிகள், அழகு நிலையங்கள் விபசாரத்துக்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அழகிகளை ஏற்பாடு செய்து கொடுக்கின்றன. இதற்காக பெரும் தொகையை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்கின்றனர். அழகு நிலையங்களில் விபசாரத்துக்கு அழைப்பதற்கு என்று பெண்களை வைத்துள்ளனர்.

செல்போன் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு தங்களது பேச்சில் மயக்க வைத்து அழகு நிலையங்களுக்கு வர வைத்து விபசாரத்தில் ஈடுபட வைக்கின்றனர். குறிப்பிட்ட நேரத்துக்கு தொகை நிர்ணயம் செய்து வசூல் செய்கின்றனர். இதில் வருமானம் குவிவதால் பெரிய அளவிலான கூட்டம் இந்த தொழிலில் களம் இறங்கியுள்ளது.

இந்த தொழிலுக்கு புதுவை போலீசாரின் ஆசி முழுவதுமாக உள்ளதாக கூறப்படுகிறது. பெயரளவுக்கு அவ்வப்போது ஒரு சில இடங்களில் சோதனை நடத்தி கணக்கு காட்டுவதோடு அவர்களது வேலை முடிந்து விடுகிறது.

விபசாரம், போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் கூட்டு சேர்ந்து கொள்ளும் சில போலீசார் அவர்களிடம் இருந்து பெருந்தொகையை மாமூலாக வசூலித்து கொள்கின்றனர். இந்த விசுவாசமான போலீசார், உயர் அதிகாரிகள் சோதனைக்கு செல்வதை முன்கூட்டிேய சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தி விடுகின்றனர்.

எனவே பெரும்பாலான இடங்களில் சோதனைக்கு செல்லும் உயர் அதிகாரிகள் வெறும் கையுடன் திரும்புகின்றனர்.

இதுமட்டுமின்றி சோதனைக்கு செல்லும் போலீசார் அங்கு விபசாரத்தில் ஈடுபடும் வெளியூர் நபர்களை பிடித்து அவர்கள் வைத்திருக்கும் பணம், நகையை பறிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

பெருமை வாய்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் அந்த நபர்கள் சபல புத்தியால் அவற்றை இழந்துவிட்ட நிலையிலும் வெளியில் தெரிந்தால் தங்களுக்கு அவமானம் என்று கருதி சொல்லாமல், கொள்ளாமல் புதுவையை விட்டு வெளியேறுகின்றனர்.

காவல்துறையில் உள்ள இத்தகைய போலீசாரை கண்டறிந்து அவர்களை களையெடுக்க வேண்டும். ஆன்மிக பூமியான புதுச்சேரியில் விபசார தொழிலை ஒழித்து கட்ட போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Tags:    

Similar News