செய்திகள்
நாட்டார்மங்கலம் வடக்கு தெருவில் சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

திருமருகல் அருகேசாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டம்

Published On 2021-10-16 12:16 GMT   |   Update On 2021-10-16 12:16 GMT
திருமருகல் அருகே சாலையில் நாற்றுநட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட நாட்டார்மங்கலம் வடக்குத்தெரு சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் குண்டும், குழியுமாக சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சாலையை சீரமைத்து தர கோரியும், மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை சீரமைக்க கோரியும் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தராததால் மக்கள் அவசர காலங்களில் வெளியில் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். .குறிப்பாக இந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட வர இயலாத நிலை உள்ளது. இதனால் விரக்தி அடைந்த கிராம மக்கள் சேதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

உடனடியாக சாலை வசதி செய்து தராவிட்டால் அடுத்த கட்டமாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News