செய்திகள்
நாகை மாவட்ட மீனவர்களின் விசைப்படகில் ஏறி இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்துவதை படத்தில் காணலாம்.

எல்லை தாண்டி வந்ததாக கூறி நாகை மீனவர்கள் 23 பேர் படகுகளுடன் சிறைப்பிடிப்பு

Published On 2021-10-15 05:28 GMT   |   Update On 2021-10-15 07:04 GMT
எல்லை தாண்டி வந்ததாக கூறி படகுகளுடன் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 23 பேரை 28-ந்தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் நாகப்பட்டினம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை மற்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையால் குறைந்த அளவிலான மீனவர்களே கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிவனேசன் மற்றும் சிவக்குமார் ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகுகளில் நம்பியார்நகர், அக்கரைப்பேட்டை சமாந்தன்பேட்டை, சந்திரபாடி, புதுப்பேட்டை, பெருமாள் பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த முருகையன் (38), குட்டியாண்டி (48), வீரசேகரன், அமிர்தலிங்கம்(38), இளங்கோவன் (48), பாண்டியன் (30), உத்திராபதி (33), தமிழ்வாணன் (48), சிவகுமார் (48), ரவி (44), சாமிநாதன் (20),

எழிலரசன் (36), அகத்தியன் (40), சிவராஜ் (35) சிவ சக்திவேல் (32) சம்பத் (40), கந்தன் (40), முருகையன் (35), ஆறுமுகம் (50), வினித் (28), விஜயேந்திரன் (39), சுதாகர் (32), தன்ராஜ் (28) ஆகிய 23 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அவர்கள் நேற்று இரவு 8 மணி அளவில் இந்திய கடல் எல்லையான கோடியக்கரை தென்கிழக்கே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல்கள் மின்னல் வேகத்தில் வந்தன.

இதைப்பார்த்த தமிழக மீனவர்கள் உடனடியாக தங்களது வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் இலங்கை ரோந்து கப்பல் நாகை மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரிடம் ஏன் எங்கள் படகுகளை சுற்றி வளைக்கிறீர்கள். மீன் பிடிக்க விரித்த வலைகள் சேதமாகிறது என்று கேட்டுள்ளனர்.

அப்போது அவர்கள் நீங்கள் வலைகளை விரித்திருப்பது இலங்கை நாட்டின் எல்லை. பல முறை உங்களை எச்சரித்தும் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறீர்கள். எனவே உங்கள் 23 பேரையும் கைது செய்கிறோம் என்று தெரிவித்தனர்.

பின்னர் தமிழக மீனவர்களின் படகுகளுக்குள் தாவிக் குதித்த இலங்கை கடற்படையினர், நம் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களை பறிமுதல் செய்தனர். மேலும் கைதான 23 மீனவர்களையும் தங்கள் நாட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு காங்கேசன் துறைமுகாம் அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.


இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தகவலை தங்கள் உறவினர்கள் மற்றும் நாகை மாவட்ட கடலோர காவல்துறையினருக்கு மீனவர்கள் செல்போன் மூலம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே நாகை மாவட்ட மீனவர்களை கைது செய்து அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து இலங்கையின் பருத்தித்துறை கடற்பகுதியில் மீன் பிடித்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அதன் பேரில் 23 பேரும் 2 விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இன்று மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. கொரோனா பரிசோதனைக்கு பின் மீனவர்கள் 23 பேரும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரணைக்கு பின் 23 மீனவர்களையும் வருகிற 28-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 23 மீனவர்களையும் இலங்கையில் உள்ள காரை நகருக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் நாகை மாவட்ட 2 விசைப்படகுகளும் காரை நகர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நாகை மாவட்ட எம்.எல்.ஏ., முகமது ஷாநவாஸ் கூறுகையில், இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்களால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதும், படகுகள் மற்றும் வலைகள் சேதப்படுத்தப்படுவதும், உடமைகள் கொள்ளையடிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போது 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மேலும் வேதனையை அளிக்கிறது. இலங்கை கடற்படையின் இத்தகைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்திய ராணுவ தளபதி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியாவை அவமதிக்கும் வகையில் இத்தகைய அத்துமீறலில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது. எனவே இதை இந்திய அரசு கண்டிப்பதோடு, சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களது விசைப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News