செய்திகள்
ஆசிரியர் ஏர்லின் பெரோரா

திருபுவனை அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 10 ஆண்டு ஜெயில்

Published On 2021-10-09 08:54 GMT   |   Update On 2021-10-09 08:54 GMT
புதுவை மாநிலம் திருபுவனை அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருபுவனை:

திருபுவனை அருகே கலித்தீர்த்தாள்குப்பத்தில் தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் விழுப்புரத்தை சேர்ந்த ஏர்லின் பெரோரா (வயது54). ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு அந்த பள்ளியில் படித்து வந்து 5 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் அந்த சிறுமி மனதளவில் பாதிக்கப்பட்டதை அறிந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திருபுவனை போலீசில் புகார் செய்தனர்.

அப்போது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கலை செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் ஏர்லின் பெரோராவை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

இதன் பின்னர் ஆசிரியர் ஏர்லின் பெரோரா ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.

அப்போது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் ஏர்லின் பெரோராவுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை தொடர்ந்து திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் குமார வேல் மற்றும் குற்றவியல் போலீசார் ஆசிரியர் ஏர்லின் பெரோராவை மீண்டும் கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். 

Tags:    

Similar News