செய்திகள்
வாலாஜா அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
வாலாஜா அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா திருவள்ளுவர் தெரு அருந்ததி பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 42), கூலித் தொழிலாளி. இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் குப்புசாமி வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் பைபாஸ் பகுதியில் ஆடுகளுக்கு தேவையான தழைகளை எடுத்துக் கொண்டு மொபட்டில் வாலாஜா நோக்கி வந்து கொண்டிருந்தார்.
வி.சி.மோட்டூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது ஆற்காட்டில் இருந்து வாலாஜாவிற்கு வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக குப்புசாமி ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த குப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.