செய்திகள்
கோப்புபடம்

விருதுநகர் லாரி அதிபர் கொலையில் 2 தொழிலாளர்கள் கைது

Published On 2021-10-02 08:14 GMT   |   Update On 2021-10-02 08:14 GMT
விருதுநகர் அருகே லாரி அதிபர் கொலையில் 2 தொழிலாளர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் அல்லம்பட்டி ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 59). இவர் ரெயில்வே பீடர் சாலையில் லாரி செட் நடத்தி வந்தார்.

இங்கு ஏராளமான லோடு மேன்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று இரவு 10.30 மணி அளவில் பால்பாண்டி தனது மகன் கருணை ஆனந்தம் (21) மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.

லாரி செட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ரெங்கநாதன் கோவில் அருகே அவர்கள் சென்றபோது அங்கு இருளில் மறைந்திருந்த 2 பேர் ஆயுதங்களுடன் வெளிபட்டனர். அவர்கள் திடீரென பால்பாண்டியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த பால்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மகன் கருணை ஆனந்தம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கொலை நடந்த பகுதி முக்கியமான ரெயில்வே பீடர் ரோடு என்பதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இரவு நேர ரெயில்களில் பயணம் செய்ய வந்தவர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

கொலை குறித்து தகவல் கிடைத்ததும் விருதுநகர் மேற்கு போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் பால்பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது மகன் கருணை ஆனந்தம் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் பால்பாண்டி லாரி செட்டில் பணியாற்றி அவரால் நீக்கப்பட்ட 2 லோடுமேன்கள்தான் கொலையாளிகள் என தெரியவந்தது. அவர்களது பெயர் விருதுநகர் பாண்டி நகர் மணிகண்டன் (35), அல்லம்பட்டி அனுமன்நகர் சூசைமனுவேல்(41) என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

மேலும் கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:-

பால்பாண்டி லாரி செட்டில் மணிகண்டன் மற்றும் சூசை மனுவேல் வேலை பார்த்தபோது மூடைகளை கொக்கி மூலம் சேதப்படுத்தி உள்ளனர். இவர்கள் தொடர்ந்து ஒழுங்கீனமாக செயல்பட்டதால் 2 பேரையும் பால்பாண்டி வேலையில் இருந்து நீக்கிவிட்டார். அதன் பிறகு அவர்கள் பல்வேறு லாரி செட்டுகளுக்கு வேலை கேட்டு சென்றனர். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பால் பாண்டியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு அவர் வந்த போது வழிமறித்து வெட்டி கொலை செய்துள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதன்அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய மணிகண்டன், சூசை மனு வேலை கைது செய்தனர். அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. 


Tags:    

Similar News