செய்திகள்
சிவகங்கையில் ரூ.10 ஆயிரத்துக்காக ஒரு ஆண்டாக ஆடு மேய்த்த 2 சிறுவர்கள்
சிவகங்கை அருகே ரூ.10 ஆயிரத்துக்காக ஒரு ஆண்டாக ஆடு மேய்க்கும் தொழிலில் 2 சிறுவர்கள் ஈடுபட்டனர். அவர்களை தொழிலாளர் துறையினர் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
சிவகங்கை:
சிவகங்கையை அடுத்த ஒக்கூர் பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலில் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுவதாக சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், தொழிலாளர் நல உதவி ஆணையாளர் ராஜ்குமார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன், குழந்தைகள் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தபாபு, சமூக ஆர்வலர் உமா, வருவாய் ஆய்வாளர் கலாவதி, கிராம நிர்வாக அலுவலர் கவுரிசங்கர் மற்றும் போலீசார் ஒக்கூர் கொழக்கட்டை பட்டிரோடு பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு 14 வயதான 2 சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை அந்த குழுவினர் மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது அதில் ஒரு சிறுவன் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த பெத்தநாச்சி வயல் கிராமத்தை சேர்ந்தவரென்றும் இவனை காளையார்கோவிலை அடுத்த பூதகுடி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் அவனுடைய தந்தைக்கு ரூ.10,000 கொடுத்து சிறுவனை அழைத்து வந்தது தெரிய வந்தது. அந்த சிறுவன் கிருஷ்ணனுக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை கடந்த ஒரு ஆண்டாக ஊர் ஊராகச் சென்று கிடை அமைத்து மேய்த்து வருவது தெரிந்தது.
மற்றொரு சிறுவனும் அதே ஊரைச் சேர்ந்தவன் என்றும் அவனுக்கு தந்தை இல்லை என்றும் அவனை காளையார்கோவிலை அடுத்த பூதகுடி கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் ரூ,10,000 கொடுத்து அழைத்து வந்ததும் அவனும் கடந்த ஒரு ஆண்டாக ஊர் ஊராக சென்று ஆடுகளை மேய்த்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் கடந்த ஒரு வருடமாக இவர்களுக்கு மூன்று வேளை உணவு மட்டும் வழங்கப்பட்டு வந்து உள்ளது.
இதைத்தொடர்ந்து கோட்டாட்சியர் அந்த 2 சிறுவர்களையும் மீட்டு காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட்டார். மேலும் அந்த 2 சிறுவர்களையும் குழந்தை தொழிலில் ஈடுபடுத்திய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மதகுபட்டி போலீசில் கிராம நிர்வாக அலுவலர் கவுரிசங்கர் புகார் செய்தார்.இந்த தொடர்பாக மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.