செய்திகள்
ஆக்சிஜன் சிலிண்டர்கள்

சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு ஆக்சிஜன் ஏற்றுமதி

Published On 2021-08-19 10:41 IST   |   Update On 2021-08-19 10:41:00 IST
சென்னையில் இருந்து ஆக்சிஜன் ஏற்றி செல்வதற்காக இலங்கையில் இருந்து அந்த நாட்டு கடற்படை கப்பல் ‘சக்தி’ நேற்று சென்னை வந்தது.
சென்னை:

இலங்கையில் கொரோனா பரவல் மிக வேகமாக உள்ளது. நேற்றுவரை அந்த நாட்டில் சுமார் 3.60 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நாளுக்கு நாள் இலங்கையில் கட்டுப்படுத்த முடியாதபடி கொரோனா பரவலுடன் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

இலங்கையில் டெல்டா வகை கொரோனா பரவி இருப்பதால் நோயாளிகள் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி பாதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

ஆனால் தேவைக்கேற்ப இலங்கையில் ஆக்சிஜன் இல்லை. உடனடியாக ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறனும் இலங்கையிடம் இல்லை. எனவே வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்யும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளது.

இலங்கையின் மிக அருகில் உள்ள நாடு என்பதால் இந்தியாவிடம் அந்த நாடு உதவி கேட்டுள்ளது. உடனடியாக ஆக்சிஜனை கொடுத்து உதவுமாறு மத்திய அரசுக்கு இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து இலங்கைக்கு பல்வேறு வகைகளிலும் இந்தியா ஆக்சிஜன் சப்ளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது.

சென்னையில் இருந்து ஆக்சிஜன் ஏற்றி செல்வதற்காக இலங்கையில் இருந்து அந்த நாட்டு கடற்படை கப்பல் ‘சக்தி’ நேற்று சென்னை வந்தது. அந்த கப்பலில் 35 டன்கள் எடை கொண்ட ஆக்சிஜன் டேங்கர்கள் ஏற்றப்பட்டுள்ளன.

இன்று அந்த 35 டன் ஆக்சிஜனுடன் அந்த கப்பல் இலங்கைக்கு செல்ல உள்ளது. இந்த ஆக்சிஜன் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டதா? அல்லது வேறு மாநிலத்தில் இருந்து தயாரித்து எடுத்து வரப்பட்டதா? என்ற விவரம் தெரியவில்லை. தொடர்ந்து சென்னையில் இருந்து இலங்கைக்கு ஆக்சிஜன் அனுப்பும் பணி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Similar News