செய்திகள்
கைது

10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய 12-ம் வகுப்பு மாணவர் கைது

Published On 2021-08-18 12:38 IST   |   Update On 2021-08-18 12:38:00 IST
காதலித்து திருமணம் செய்து 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய 12-ம் வகுப்பு மாணவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாணவர் வேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.
பவானி:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம், புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 19 வயது மாணவன், அதே பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து அந்தியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருவரும் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், மாணவியை பெற்றோர் தேடுவதை அறிந்த மாணவன், அம்மாணவியை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டான்.

இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக அம்மாணவி சோர்வுடன் காணப்பட்டதோடு, வாந்தி எடுத்துள்ளார். இதைப்பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாணவியிடம் பெற்றோர் விசாரிக்கையில் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்ததும், மருத்துவ பரிசோதனையில் 3 மாத கர்ப்பம் என தெரியவந்தது.

இதைகேட்ட பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகினர். உடனடியாக இது குறித்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை கைது செய்தனர். பின்னர் ஈரோடு இளஞ்சிறார் நீதிமன்ற குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.

Similar News