செய்திகள்
கோப்புப்படம்

செந்துறை அருகே மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் மரணம்

Published On 2021-08-12 16:37 IST   |   Update On 2021-08-12 16:37:00 IST
செந்துறை வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் 30 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் முகாமிட்டு வீடு, வீடாக சென்று கண்காணித்து வருகின்றனர்.

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பிலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள மேலத்தெருவில் பலருக்கு அடுத்தடுத்து மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து பார்த்ததில் அதில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சலும், 3 பேருக்கும் கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சுகாதாரத்துறையினர் அக்கிராமத்தில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். செந்துறை வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி தலைமையில் 30 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் முகாமிட்டு வீடு, வீடாக சென்று கண்காணித்து வருகின்றனர்.

செந்துறை தாசில்தார் குமரய்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் உள்ளிட்ட ஊராட்சி நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று தண்ணீர் தேங்கியுள்ளதா என கண்டறிந்து அதனை சீர்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி சென்னை அருகே உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் இருந்து வந்த பிலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த நிவேதா (வயது 23) என்கிற இளம்பெண் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரியலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் இளம்பெண் டெங்கு காய்ச்சலால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம காய்ச்சலால் இளம்பெண் பலியான சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Similar News