செய்திகள்
கைதான 3 பேரையும் படத்தில் காணலாம்.

2 வாலிபர்களை நிர்வாணப்படுத்தி பணம் பறிப்பு- 3 பேர் கைது

Published On 2021-08-12 10:13 IST   |   Update On 2021-08-12 10:13:00 IST
ஆன்லைன் மூலம் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து 2 வாலிபர்களை நிர்வாணப்படுத்தி பணம் பறித்தது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:

ஓரினச்சேர்க்கைக்கு உலகில் பல நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி இருந்தும் அதனை நமது கலாச்சாரத்திற்கு எதிராகவே மக்கள் பார்த்து வருகின்றனர். இருந்த போதிலும் ஆன்லைனில் ஓரினச்சேர்க்கைக்கு பல அப்ளிகேசன் தொடங்கப்பட்டு அதன் வாயிலாக ஓரினச்சேர்க்கையாளர்கள் இணைந்து வருகின்றனர். விருப்பமுள்ளவர்கள் தங்களது துணைகளை தேடி சந்தித்து வருகின்றனர்.

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆன்லைனில் செல்போன் அப்ளிகேசன் வழியாக அருகே உள்ளவர்களை தொடர்பு கொண்டு இணைந்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஓசூரை சேர்ந்த 2 வாலிபர்கள் தங்களது செல்போனில் உள்ள கிரின்ட்ர் கே சாட் என்ற ஒரு அப்ளிகேசன் வழியாக துணை ஓரினச்சேர்க்கையாளர்களை ஆன்லைனில் தனித்தனியாக தொடர்பு கொண்டனர். அப்போது அவர்களை தொடர்பு கொண்ட, மறுமுனை நபர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.

அதனை நம்பி இந்த வாலிபர்களும் தனித்தனியாக அவர் கூறிய இடத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது வாலிபர்களை பிடித்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை அடித்து உதைத்து நிர்வாணப்படுத்தி படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவோம், குடும்பத்தாரிடம் தெரிவித்து விடுவோம் என மிரட்டி, அச்சுறுத்தி அவர்களிடம் பணம் பறித்துள்ளனர்.

மேலும் அவ்வப்போது நாங்கள் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.

பின்னர், பாதிக்கப்பட்ட வாலிபர்கள் இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கர்நாடகா மாநிலம் சர்ஜாபுரத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 33) சுனில் (28) மற்றும் ஓசூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News