செய்திகள்
சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம்.

குன்னூர் அருகே ராணுவத்தினர் மூடிய சாலை மீண்டும் திறப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2021-08-06 17:44 IST   |   Update On 2021-08-06 17:44:00 IST
குன்னூர் அருகே ராணுவத்தினர் மூடிய சாலையை திறந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊட்டி:

குன்னூர் அருகே பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேல் பாரத்நகர் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்துக்கு செல்லும் சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்ததோடு, சிறிய ரக வாகனங்கள் சென்று வந்தது. அப்பகுதி மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேல் சாலையை பயன்படுத்தினர்.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சாலை ராணுவத்துக்கு சொந்தமானது என்று கூறி, 2 இடங்களில் முள்வேலியுடன் தடுப்புகள் அமைத்தனர். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் நோயாளிகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 2 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டி இருந்ததால் மிகவும் சிரமம் அடைந்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டர், ராணுவ அதிகாரி போன்றோரிடம் மூடப்பட்ட சாலையை திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் முடிவு செய்தனர்.

இந்தநிலையில் நேற்று குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி பேச்சுவார்த்தைக்கு பின் மேல் பாரத்நகர் பகுதியில் அடைக்கப்பட்ட சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறந்து விட உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து 2 இடங்களில் வைக்கப்பட்ட முள்வேலி அகற்றப்பட்டு, சாலை திறந்து விடப்பட்டது.

அப்போது குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரேஷ், தாசில்தார் தினேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனாத்தனன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றிய அதிகாரிகளுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Similar News