செய்திகள்
கர்ணன் பட பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு பெண் அலுவலர்
ஜெயங்கொண்டம் அருகே கர்ணன் பட பாடலை பாடி அரசு பெண் அலுவலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டத்தில், கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவின்பேரில் கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ஜெயங்கொண்டத்தில் நகராட்சி ஆணையர் சுபாஷினி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தூவுதல் போன்ற சுகாதார பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்தநிலையில், நகராட்சியில் வருவாய் உதவியாளராக பணிபுரியும் அலுவலர் சரஸ்வதி(வயது 46) என்பவர், சமீபத்தில் வெளியான பிரபலமடைந்த கண்டா வரச் சொல்லுங்க, என்ற திரைப்படப் பாடலை மாற்றி எழுதி, கண்டா விரட்டியடிங்க... கொரோனாவை கண்டா விரட்டியடிங்க, தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்க... முககவசம் அணிந்து கொள்ளுங்க, சமூக இடைவெளியை கடைப்பிடிங்க என்ற பாடலை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்த விழிப்புணர்வு பாடலை பொதுமக்களில் சிலர் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.