செய்திகள்
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திருமணமான தம்பதிகள் திருமண மாலையை கடலில் விட்டனர்

தேவனாம்பட்டினம் கடற்கரையில் புதுமண தம்பதிகள் வழிபாடு

Published On 2021-08-03 08:36 GMT   |   Update On 2021-08-03 08:36 GMT
கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பெண்கள் அந்தந்த பகுதியில் உள்ள கோவில்கள் மூடப்பட்டு இருந்தாலும் வெளியில் நின்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு சாமி கும்பிட்டு வழிபட்டனர்.
கடலூர்:

ஆடி மாதம் என்றாலே பெண்களுக்கான பிரத்யேக மாதமாகும். இதில் ஆடி மாதம் 18ந்தேதி ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. இவ்விழா காவிரியின் கரையோர பகுதியில் விசே‌ஷமாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் காவிரி தாய்க்கு காணிக்கை தரும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டியும், சுமங்கலி பெண்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற வேண்டியும் ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரைக்கு சென்று கங்கா தேவிக்கு சிறப்பு வழிபாடு செய்து சுமங்கலி பூஜை நடத்தி, வழிபடுவார்கள்.

புதுமண தம்பதிகளை பொறுத்தவரையில் திருமணத்தன்று சூடிய மாலைகளை பத்திரப்படுத்தி வைத்து ஆடிப்பெருக்கன்று அதை ஆற்றில் விடுவது வழக்கம். இதன் மூலமாக நீரில் மாலை அடித்து செல்வது போன்று, புதுமண தம்பதிகளின் வாழ்வில் கஷ்டங்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு மகிழ்ச்சி பெருகும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பெண்கள் அந்தந்த பகுதியில் உள்ள கோவில்கள் மூடப்பட்டு இருந்தாலும் வெளியில் நின்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு சாமி கும்பிட்டு வழிபட்டனர்.

இதனைத்தொடர்ந்து புதுமணத்தம்பதிகள் கடலூர் பகுதியில் காவிரி ஆறு இல்லாத காரணத்தினால் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரைக்கு தனது கணவருடன் பெண்கள் சென்றனர்.

பின்னர் தங்கள் திருமணத்தன்று அணிந்திருந்த மாலையை சூரிய பகவானை வணங்கி கடலில் விட்டனர். அப்போது ஒரு சில தம்பதிகள் மட்டும் சிறிது நேரத்திற்கு ஒரு முறை தங்கள் மாலைகளைப் தண்ணீரில் விட்டு சென்றதை காணமுடிந்தது.

Tags:    

Similar News