செய்திகள்
புதுக்கோட்டை ரெயில் நிலையம்

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தின் வருவாய் உயர்வு

Published On 2021-07-29 16:19 IST   |   Update On 2021-07-29 16:19:00 IST
புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வந்து செல்ல வசதியாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை:

கொரோனா வைரஸ் பரவலால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. ரெயில்வே துறையில் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின் படிப்படியாக ரெயில்கள் இயக்கப்பட தொடங்கின. கொரோனா 2-வது அலை வந்த பிறகும் ரெயில்வே வருமானம் குறைந்தது.

ஊரடங்கின் காரணமாக பயணிகள் அதிக அளவில் வெளியில் செல்லவில்லை. இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களின் எண்ணிக்கையும் குறைந்தது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததாலும், ஊரடங்கின் தளர்வாலும் பயணிகள் அதிக அளவில் ரெயில் போக்குவரத்தை நாடியுள்ளனர்.

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் மட்டும் நடைமுறையில் உள்ளன. ஒரு சில பாசஞ்சர் ரெயில்களில் முன்பதிவில்லா டிக்கெட் வினியோகிக்கப்படுகின்றன. மதுரை கோட்ட ரெயில்வேயில் முக்கியமான ஒரு ரெயில் நிலையமாக புதுக்கோட்டை உள்ளது. தற்போது புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

புதுக்கோட்டை வழியாக சென்னை, ராமேசுவரம், காரைக்குடி, செங்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்படும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வருவாய் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் வருவாய் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வருவாய் உயரத்தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை புதுக்கோட்டை ரெயில் நிலையத்தின் மொத்த வருவாய் ரூ.74 லட்சத்து 61 ஆயிரம் வரை ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைந்து வந்த வருவாய் கடந்த ஜூன் முதல் மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.11 லட்சத்து 74 ஆயிரம் வரை வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து பயணிகள் வருகை, ரெயில்கள் இயக்கம் மூலம் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வந்து செல்ல வசதியாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Similar News