செய்திகள்
மரணம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

Published On 2021-07-29 10:20 IST   |   Update On 2021-07-29 10:20:00 IST
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் பகுதியில் வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள ராஜகோபுரத்தில் செடி கொடிகள் வளர்ந்து உள்ளன.

இதனை அகற்றும் பணியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மஞ்சப்பூ தெருவை சேர்ந்த முனியாண்டி மகன் முனீஸ்வரன் (வயது 39) ஈடுபட்டிருந்தார்.

அப்போது கோபுரத்தின் மீது ஏறி செடி, கொடிகளை வெட்டி அகற்றிவிட்டு அதன் வேரில் டப்லோ என்னும் மருந்தினை ஊற்றிக் கொண்டு இருந்தார்.

அப்போது முனீஸ்வரன் நிலைதடுமாறி கோபுரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடலில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த 4 நாட்களாக சிகிச்சையில் இருந்த முனீஸ்வரன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News