செய்திகள்
மழை

விருத்தாசலம் பகுதியில் கனமழை- நெல் கொள்முதல் நிலையத்தில் 1,000 மூட்டைகள் நாசம்

Published On 2021-07-28 10:04 GMT   |   Update On 2021-07-28 10:04 GMT
கடந்த சில தினங்களாக விருத்தாசலம் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்றும் பரவலாக மழை பெய்தது.
விருத்தாசலம்:

விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றி உள்ள மணவாளநல்லூர், கோமங்கலம், முகுந்த நல்லூர், கொடுக்கூர், பெரம்பலூர், தொரவளூர், பரவலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

குறுவை அறுவடை பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிறைவடைந்த நிலையில் விவசாயிகள் தங்கள் அறுவடை செய்த நெல்லை குவியல் குவியலாக கொண்டு வந்து கோமங்கலம் கிராமத்தில் திறக்கப்பட்டிருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர்.

கடந்த சில தினங்களாக விருத்தாசலம் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்றும் பரவலாக மழை பெய்தது. இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழை நீரானது தேங்கி நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்தது. மேலும் விவசாயிகள் குவித்து வைத்திருந்த நெல் குவியல்களிலும் மழை நீர் புகுந்ததால் நெல் மணிகள் அனைத்தும் முளைத்து வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் விவசாயிகளின் 1,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் அனைத்து நெல் மூட்டைகளும் நனைந்து முளைத்து விட்டது.

எனவே கோமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News